தும்பளை மேற்கு (கலட்டி)

யாழ்ப்பாண நகரிலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 30 km தூரத்தில் இருக்கும் வடமராட்சிப் பகுதியானது பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய மூன்று பிரதேசங்களை உள்ளடக்கியது. பருத்தித் துறைப் பிரதேசம் தும்பளை, புலோலி, பருத்தித்துறை, வியாபாரிமூலை, இன்பருட்டி, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை, தொண்டமானாறு ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பருத்தித்துறைப் பட்டினத்தின் பிரதாக வீதியிலிருந்து கிழக்குப்புறமாக கிளைவிட்டபடி தும்பளை வீதியானது 1 km வரை தும்பளை கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்றது.


தும்பளை கிராமத்தில் முன்னைய எல்லைகளாக வடக்கில் பாக்கு நீரிணையும், கிழக்காக வங்காள விரிகுடாவையும், தெற்காக கற்கோவளம், புலோலி, மாதனை போன்ற கிராமங்களையும், மேற்காக புலோலி கிழக்கையும் கொண்டு ஏறத்தாழ 2 சதுர கிலோமீற்றர் பரப்பளவு விஸ்தீரணம் கொண்டதாக இருந்தது.


இன்று மேற்குறிப்பிட்ட தும்பளை கிராமப் பகுதியில் பெருமளவு மூன்று கிராம சேவகர் பிரிவுகளுக்குள் அடங்கியுள்ளது. 4ம் குறுக்குத் தெருவடியிலிருந்து தும்பளை வீதிக்குத் தெற்காக தும்பளை மேற்கு கிராம சேவகர் பகுதியாக (J/404) உள்ளது.


தும்பளை மேற்கு பெரியதம்பிரான் கோயிலடியைச் சூழவுள்ள மக்கள் சந்திரப் பரமானந்தர் குடியைச் சேர்ந்தவர்கள். சந்திரப் பரமானந்தர் சோழ மகாராசாவின் பிரதானிகளின் ஆஸ்தான வைத்தியராகவும், சோதிடராகவும் செம்பியன்பற்று பச்சிலைப் பள்ளியில் வாழ்ந்தவர்கள். இவர்களின் பரம்பரையினர் தும்பளை மேற்கில் குடியேறி சோதிடம், சித்த வைத்தியத்துறை என்பவற்றில் ஈடுபட்டு பேரும் புகழும் பெற்று வாழ்ந்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக தும்பளை மேற்கு மக்களுக்கு செம்பியன்பற்று பகுதியில் பரம்பரை காணிகளும் இரத்த உறவினர்களும் உள்ளதை குறிப்பிடலாம்.


தும்பளை மேற்கு பகுதி மக்களின் கல்விநிலை பற்றி நோக்கும் போது அது அன்றிலுருந்து இன்றுவரை மிகவும் சிறப்பாகவே இருந்து வருகிறது. இதற்கு எடுத்துகாட்டாக பலர் சுதேச வைத்தியர்களாகவும் சோதிடர்களாகவும் இருந்ததை குறிப்பிடலாம். பரம்பரைபரம்பரையாக சோதிட வைத்தியம் அறிந்த குடியைச் சேர்ந்தவர்கள் தும்பளை மேற்கில் ஆதியான காலம் முதல் திண்ணைப்பள்ளிகூடங்களை அமைத்து கல்வி போதித்தனர் ஐரோப்பியர் வருகையைத் தொடர்ந்து உருவான கிறீஸ்தவ பாடசாலைகளுக்கு எதிராக அல்லது போட்டியாக சைவ பாடசாலைகளும் ஆரம்பிக்கபட்டன. இன்று தும்பளை மேற்கில் உயர்ந்து நிற்கும் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் இவ்வூர் பிள்ளைகளின் கல்வியில் பெரும் பங்காற்றுகிறது.


அடுத்ததாக தும்பளை மேற்கின் பொருளாதாரம் மற்றும் தொழில் நிலை பற்றி நோக்கும் போது அது மிகவும் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றிருந்தது. தும்பளை மேற்கு பகுதியில் சென்ற நூற்றாண்டு வரை வைத்தியத்திற்கும் சோதிடத்திற்கும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இயற்கை மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்யும் சுதேச வைத்திய முறையைப் பின்பற்றும் பரியாரிமார்களும் சாஸ்திரத் துறையில் பேர் போன சாஸ்திர விற்பன்னர்கள் பலரும் இப் பகுதியிலே பரம்பரைபரம்பரையாக தொண்டு செய்து வந்தனர். இதற்கு ஆதாரமாக பரியாரி வளவு சாஸ்திரியார் ஒழங்கை என்னும் இடங்களைக் குறிப்பிடலாம். தும்பளை மேற்கு சந்திரப்பரமானந்தர் குடி சோழ மகா ராசாவின் பிரதானிகளின் ஆஸ்தான சோதிடராக விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இன்று கால மாற்றத்தால் இவ்வாறான தொழில்களைச் செய்வோர் குறைவு என குறிப்பிடலாம்.


தும்பளை பகுதியில் பல நூற்றாண்டுகளாக பருத்தி நூல் நூற்று வியாபாரம் செய்தல் பிரதான தொழிலாகும். மற்றும் பனம்மட்டைகள் பொச்சுகள் சணல் என்பவற்றிலிருந்து தும்பு பிரித்தெடுக்கும் தும்புத் தொழிலும் இங்கே சிறப்பாக இடம் பெற்றது. எனினும் இவ்விரு தொழில்களும் இன்று அருகிப் போய் விட்டது.


தும்பளை மேற்கைச் சேர்ந்த பலர் வியாபாரிகளாக இருந்தனர். ஆரம்பத்தில் மாட்டு வண்டில்கள் மூலமும் பின்னர் பாரவூர்திகள் (லொறிகள்) மூலமும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் சிங்களப்பகுதிகளுக்கு பனம்கட்டி பனாட்டு புகையிலை பெட்டி பாய் சுளகு போன்றனவும் அங்கிருந்து நெல் பயறு குரக்கன் போன்றனவும் கொண்டுவரப்பட்டன. சிங்களப்பகுதி என்னும் போது அனுராதபுரம் மதவாச்சி கெப்பிற்றிக்கொலாவ போன்ற இடங்களாகும். இங்கு பலர் ஏற்றுமதி இறக்குமதியும் நிலையான கடைகள் அமைத்தும் வியாபாரம் செய்தனர். குறிப்பாக 19ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை இவ் வியாபாரம் இடம் பெற்றது. பின்னர் தமிழ் சிங்கள கலவரத்தின் போது பல வியாபார நிலையங்களும் லொறிகளும் எரித்து அழிக்கப்பட்டன. இதன் பின்னர் தும்பளை மேற்கு பகுதி வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. எனினும் இன்று சிலர் வியாபாரம் செய்வதை கண்கூடாக காண முடிகிறது. இனக் கலவரத்தினால் வியாபார நடவடிக்கைகள் முடக்கப்பட்டவுடன் வன்னிப்பகுதிகளில் விவசாயம் செய்யத் தொடங்கினர்.


அடுத்ததாக இங்கு பனம் பொருள் உற்பத்தியில் பலர் ஈடுபட்டிருந்ததை குறிப்பிடலாம். பனம்கட்டி பனாட்டு புழக்கொடியல் ஒடியல் ஒடியல்மா மற்றும் பெட்டி பாய் சுளகு போன்றனவும் உற்பத்தி செய்து சிங்களப்பகுதிகளுக்கு அனுப்பப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது. இன்றும் சிலர் இதை தொடர்ந்து செய்கின்றனர். வெளிநாடுகளில் வாழ்கின்ற பல புலம் பெயர்ந்த தம்pழர்கள் இவற்றை இங்கிருந்து வாங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது. மற்றும் தும்பளை நல்லெண்ணை ஒரு காலத்தில் குடாநாடு தாண்டிய பிரபல்யம் கொண்டிருந்தது. இன்றுகூட சிலர் இதைச் செய்கிறார்கள். மற்றும் சில வீடுகளில் பழைய செக்குகளும் ஊத்துமரங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


இன்று தும்பளை மேற்கு பகுதியில் பவரும் பல தொழில்களைச் செய்கின்றார்கள். ஆசிரியர், எழுதுவினைஞர் போனற பல பொறுப்புக்களை அரச அரசசார்பற்ற நிறுவனங்களில் பணி புரிகின்றனர். மேலும் சிலர் வியாபாரம், மேசன் வேலை, கூலி மற்றும் சலவைத் தொழில் போன்ற பல தொழில்களைச் செய்கின்றனர்.


தும்பளை மேற்கு என்றவுடனே நினைவிற்கு வருவது ஸ்ரீ வரத விநாயகர் ஆலயம் தான். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு இணங்க இங்கே ஸ்ரீ வரத விநாயகர் ஆலயம், செந்திலாவத்தை திருக்காளாத்தி ஈஸ்வரர் ஆலயம், வீரபத்திரர் கோயில், ஒதியடி வைரபர் கோயில், முல்லைக் கோயில், முருகன் கோயில், கலட்டி அம்மன் கோயில் போன்ற பல ஆலயங்கள் இங்கிருந்து தும்பளை மேற்கு மக்களுக்கு அருள் பாலிக்கின்றன.


நன்றி