நூல்நிலையம் வரலாறு

தும்பளை மேற்கு சனசமூக நிலையம் வரலாறு
(ஊர் மக்களிடம் வாய்மூலமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆவணம்)





1) திரு. நா.முத்துகிருஷ்ணன் வழங்கிய தகவல் (வாய்மூலம்)

தற்பொழுது தும்பளை மேற்கு சனசமூக நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் நூலகம் 1949ம் ஆண்டு தமிழ் நிலையம் என்ற பெயரில் தற்போது இயங்கி வரும் தற்காலிக கட்டடத்தில் ஆரம்பிக்கப் பட்டது.

அக்கால கட்டத்தில் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் மேல் வகுப்பில் கல்வி கற்ற மாணவர்களான வைத்தியர் கி.குமாரசாமி (தலைவர்), ஆசிரியர் வ.செல்வரத்தினம் (செயலாளர்), திரு.த.திருஞானசம்பந்தர் (பொருளாளர்), திரு.மு.ரத்தினசிங்கம் போன்ற பல கிராமத்து இளைஞர்களால் தமிழ் நிலையம் என்ற பெயரில் இந்நூலகம் ஆரம்பிக்கப்பட்டது.

நிலைய அங்கத்தவர்களின் சந்தா பணத்தின் மூலமும், நன்கொடைகள், அன்பளிப்புக்கள் மூலமும், வீரகேசரி, தினகரன் போன்ற நாளேடுகளும் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து (தமிழ்நாடு) வெளிவருகின்ற சஞ்சிகைகளான கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், சுதேச மித்திரன் போன்றனவும் பொதுமக்களின் பாவனைக்காக வாசிக்க விடப்பட்டது.

அப்பொழுது தும்பளையிலே கிராம சேவையாளராக இருந்த விதானையார் திரு.சு.கந்தையா அவர்களின் தலைமையின் கீழ் மாதாந்த மாணவர் நிகழ்ச்சி என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிகழ்ச்சியில் தும்பளை மேற்கை சேர்ந்த மாணவர்களின் மேடைப் பேச்சு நிகழ்வில் பலர் பங்குபற்றினர்.

இந்நூல் நிலையம் அமைந்துள்ள கட்டடம் பெரிய தம்பிரான் ஆலயத்திற்கு மிகவும் அருகாமையில் அமைந்திருந்தது. இக்கட்டடம் அன்று ஆலய குருக்களுக்கு சொந்தமாக இருந்தது. ஆலய குருக்கள் சிறிது காலத்தில் மந்திகை பகுதியில் குடியேறி வசித்தமையினால் இக்கட்டட்த்தை காலம் சென்ற பி.வே.கந்தசாமி அவர்களிடம் கையளித்தார். பின்னர் இக்கட்டடம் குடிமனையாக்கப்பட்டு பயன்படுத்தப்ப்டதால் நிலையத்தின் இடத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

பின்னர் திகிரி ஒழுங்கையில் உள்ள பிரதான நாற்சந்தியில் கிழக்கு புறமாக உள்ள ஒரு வீட்டில் (தற்பொழுது நிதர்ஷனம் என்ற பெயரில் உள்ள வீடு) மாற்றப் பட்டது.

அதன் பின்னர் தற்பொழுது நிலையத்திற்கென நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் முன்னர் அமைந்திருந்த மண்குடிசையில் சிறிது காலம் இயங்கி வந்தது.

அதன் பிறகு தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள அதிபர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது.

அதற்கு பிற்பட்ட காலத்தில் ஆசிரியர் திரு. நாகேந்திரராசா அவர்களின் வீட்டின் ஒரு பகுதியில் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர் பிராமண வீதியில் உள்ள ஒரு வீட்டிலும் அதன் பின்னர் ஆசிரியர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் வீட்டிலும் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இவ்வாறு பல வீடுகளில் சனசமூக நிலையம் இயங்கி வந்தது. வல்லிபுரம் என்று அழைக்கப்படும் வைத்தியர் க.சுப்பிரமணியம் தனது சிறந்த பண்பு காரணமாக வரதவிநாயகர் ஆலயத்திற்கு எதிரே உள்ள தனது காணியில் சனசமூக நிலையத்திற்கென 1959ல் ஒரு கட்டடத்தை அமைத்துக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து இக்கட்டடத்தில் நிலையம் சிறப்பாக செயற்பட்டது. தளபாடங்கள் சிலவும் அக்காலத்தில் நிலையத்திற்கென செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

பின்னர் இக்கட்டடத்திற்கு பின்னுக்கு நின்ற புளியமரங்களின் வேர்களினால் இக்கட்டடம் சேதமுற்றது. அக்காலப் பகுதியில் இருந்த நிர்வாக சபையினரால் 90களில் இக்கட்டடத்தை திருத்தி நிலம் போட்டு மின்னிணைப்பு போன்றவற்றைச் செய்தார்கள்.

பின்னரும் இக்கட்டடம் சேதமுற்று பாவனைக்கு உதவாமல் ஆகியுள்ளதனால் தற்போது இருக்கும் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.

தகவல வழங்கியவர்திரு.நா.முத்துக்கிருஷ்ணன்.



2) திரு. பா. இரகுவரன் (புத்தகம் மூலம்)

தும்பளை மேற்கு சனசமூக நிலையம் 1937ல் ஆங்கில ஆசிரியரான வைரமுத்துவின் வீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1959ல் நிரந்தர கட்டடம் க.சுப்பிரமணியம் (R.M.P) அவர்களால் பெரிய தம்பிரான் கோவிலடியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரும் வாழ்வும் (தும்பளை பற்றிய ஆவணம்) திரு. பா. இரகுவரன்.






3) திரு. மு. குணநேசன் (வாய்மூலம்)

1991ம் ஆண்டளவில் இவ்வூரைச் சேர்ந்த வங்கி உத்தியோகத்தரான திரு. த. உதயமூர்த்தி அவர்கள் சனசமூக நிலையத்தின் நீண்ட கால வருமானத்தை நோக்கமாகக் கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் இரு கம்பிகளையும் (கருவிகளை) வாடகைக்கு விடுவதனால் வரும் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார். இதன் மூலம கிடைத்த வருமானத்தால் நீண்ட காலமாக பத்திரிகைகள் பெறப்பட்டன. 1992ம் ஆண்டு அரசியல்இ பொருளாதார சூழ்நிலை காரணமாக ஊர்மக்களுக்கு ஒரு தள்ளுவண்டில் அவசியமாக தேவைப்பட்டது. இதனால் தள்ளுவண்டில் இராமல்ங்கம் சுதரகரன் அவர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியுடனும் நிர்வாக சபையினாலும் செய்யப்பட்டு அன்பளிப்பாக இந்நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

இரண்டாயிரதது நான்காம் ஆண்டளவில் எமது ஊர் இளைஞர்களால் சனசமூக நிலையத்தின் வருமானத்தை மேலும் அதிழகரிக்கும் நோக்கமாகக் கொண்டு சீமெந்து கற்கள் அறுக்கும் அச்சுகள் (6 மரஅச்சு) செய்யப்பட்டு சனசமூக நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இரண்டாயிரத்து எட்டாம் (2008) ஆண்டில் திரு. திருமதி தர்மலிங்கம் (கனடா) அவர்களால் சனசமூக நிலையத்திற்கு ஒரு காணி வழங்கப்பட்டது.

தகவல் திரு. மு. குணநேசன்



4) திரு. மு. காண்டீபன் (வாய்மூலம்)

எமது சனசமூகநிலையத்தினால் பரம்பரையாக எங்கள் ஆலய முன்றலில் இராமயண தொடர் நாடகம் வாராந்தம் அரங்கேற்றி வந்துள்ளனர். இக்கலையானது 1990ஆம் ஆண்டுவரை சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் இச்சனசமூக முன்றலில் அரங்கேறி வந்துள்ளது.

1992ஆம் ஆண்டு நிர்வாகத்தினரால் மக்களின் ஒத்துழைப்புடன் ரூபா.10 பெறுமதியான அதிஷ்ட லாப சீட்டிழுப்பை நடாத்தி அதன்மூலம் பெற்ற வருமானத்தில் சனசமூக நிலைய கட்டடத்தை திருத்தி அமைத்தனர்.

பன்னெடுங் காலமாக சனசமூக நிலைய நிதி வளர்ச்சிக்காக மாதனைக் கண்ணகை அம்மன் ஆலயத்தின் விழாக்கால கடையினை அமைத்து அதன் மூலம் பெற்ற சொற்ப வருமானத்தைக் கொண்டு பத்திரிகைகள் வாங்குவதற்கு செலவிட்டனர். இதனை கடந்த இருவருட காலமாக இடைநிறுத்தி வைத்துள்ளனர்.

தகவல் வழங்கியவர்: மு.காண்டீபன்.