நிலையத்தின் ஆரம்பமும் இன்றைய நிலையும்

எமது கிராமத்தில் அமைந்துள்ள தும்பளை மேற்கு சனசமூக நிலையமானது 1949.04.16 அன்று இவ்வூர் இளைஞர்களின் முயற்சியாலும் ஊர் மக்களின் பேராதரவினாலும் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பத்திரிகைகள்,நாளேடுகள், வாரமலர்கள் மற்றும் சஞ்சிகைகள் என்பன வாசகர்களின் வாசிப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பல வகையான புத்தகங்களும் மாணவர்களுக்காகவும் ஏனைய வாசகர்களுக்கவும் பலரது முயற்சியால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்த எமது சனசமூக நிலையம் ஒரு நிலையான கட்டடம் இல்லாமல் இப்பகுதியிலுள்ள பல வீடுகளில் இயங்கி வந்தது. எனினும் இந் நிலையத்தால் கலாசார மாறும் சமய நிகழ்வுகளும் நடத்தப்பட்டதாக அறிய முடிகிறது. அதாவது சரஸ்வதி பூசை போன்ற சமய நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையிலே இந் நூல்நிலையத்திற்கு ஒரு நிலையான கட்டடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து எமது மக்கள் பலரினதும் நினைப்பில் இருந்தது. இதே போல இந் நிலையத்திற்கு கட்டடம் அமைக்க வேண்டும் என்ற என்னத்தை காலம் சென்ற கௌரவ வைத்தியர் சுப்பிரமணியம் அவர்களால் தும்பளை மேற்கு வராத விநாயகர் ஆலய முன்றலில் ஒரு கட்டடத்தை அமைத்து அவ்வெண்ணத்தை செயல் வடிவமாக்கினார். இதன் பின்னர் இக்கட்டடத்திலே நிலைய செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன என்பது மறுப்பதற்கில்லை. பல நூறு புத்தககங்களும் சஞ்சிகைகளும் இங்கே வைக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையிலே நிலையத்திற்கென அலுமாரிகள், மேசைகள், வாங்குகள் போன்ற தளபாடங்களும் ஊர் மக்களின் முயற்சியால் வாங்கப்பட்டன. சிறுவர்களுக்கான புத்தகங்கள், கதைப் புத்தகங்கள், புராண புத்தகங்கள் மற்றும் ஏனைய பயன்தரக்கூடிய புத்தகங்களும் நிலையத்தில் இருந்தன. மற்றும் கையெழுத்து சஞ்சிகைகளும் வெளியிடப்பட்டது. இது இவ்வூர் மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டியது.கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் போன்ற பல முத்துக்களை உள்ளடக்கிய மாலையாக விளங்கியது. இன்னும் கூட சில கையெழுத்து சஞ்சிகைகள் எமது நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கையெழுத்து சஞ்சிகைகள், பத்திரிகைகள், நூல்கள் மற்றும் சஞ்சிகைகள் போன்றனவும் சமய மற்றும் கலாசார நிகழ்வுகளும் எமது நிலையத்தில் இடம்பெற்றது.இதற்கான செலவுகளுக்காகவும் நிலையத்திற்கு நிரந்தர வருமானத்தை ஈட்டித் தருவதற்காகவும் திரு.த.உதயமூர்த்தி குழாய்க் கிணறு இடிக்கும் கம்பியை அன்பளிப்பாக வழங்கினார். இதே போல் நிலையத்திற்கென தள்ளுவண்டி ஒன்று செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. மற்றும் கல்லரியும் அச்சுகளும் வாடகைக்கு விடப்படுகின்றது.(இன்றும்) . இவ்வாறு நிரந்தர வருமானத்தை பெறுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் நடைபெற்று வந்த மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தம் நாட்டின் பல முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தடையாக இருந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.அந்தவகையில் எமது நிலைய வளர்ச்சியின் தடைக்கு இந்த உள்நாட்டு இனமோதலும் ஒரு தடையாக இருந்தது. இதனால் நிலையத்துடன் செயற்பட்ட பலர் நாட்டைவிட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது.மற்றும் கால ஓட்டத்தினாலும் ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட கட்டம் சிதைவடையத்தொடங்கியது.பல தடவைகள் இக் கட்டடத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்றது.எனினும் இக் கட்டடத்தை காப்பாற்ற முடியவில்லை.
எனவே மீண்டும் இச்சனசமூகநிலையம் ஒரு தனியாரின் வீட்டிற்கு மாற்றப்பட்டது.அதாவது சில வருடங்களாக திருமதி பகவதி கணேசன் வீட்டில் தற்காலிகமாக இயங்கிவருகின்றது.
எமது சனசமூகநிலையத்திற்கு முன்னர் கட்டடம் இருந்தாலும் அது அமைந்துள்ள காணி நிலையத்தின் காணி அல்ல.இன்று இக் கட்டடமும் சிதைவடைந்துவிட்டது.எனவே பல வருடங்களாக சனசமூகநிலையத்திற்கு ஒரு சொந்தக்காணி தேவைப்பட்டது.இச் சந்தர்ப்பத்தில் திருமதி பவானி தர்மலிங்கம் அவர்கள் சேவில்ஒழுங்கை,தும்பளை மேற்கு பருத்தித்துறை. என்னும் முகவரியில் உள்ள 1 பரப்பு 3 குழி காணியை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
சில வருடங்களின் பின்னர் 2008ம் ஆண்டில் இருந்து தும்பளை மேற்கு பகுதி மக்களிடம் நிலைய சந்தாப்பணம் வருடத்திற்கு ரூபா 300 ப்படி அறவிடப்படுகிறது.மக்களும் மிகவும் ஆர்வமாக சந்தாப்பணத்தைக்கட்டி நிலையத்தின் அங்கத்தவராக தங்களை பதிவு செய்தனர்.
அடுத்ததாக நிலைய கட்டடம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.அதற்கு உதவியாக கிணறு ஒன்று அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.திகதி நடந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ,அதாவது ஏற்கனவே இருந்த பாழடைந்த கிணற்றை மூடிவிட்டு புதிய குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டது.
அதாவது இவ்வூர் இளைஞர்கள் தாங்களே முன்வந்து இக்கிணற்றை இடித்து உதவினார்கள்.இதனால் பெரிய ஒரு செலவை குறைக்க முடிந்தது.
தற்பொழுது நிலையத்தின் நிர்வாகசபைக்கூட்டம் மாதம்தோறும் மற்றும் பொதுக்கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் தவறாது நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது நிலையத்திற்கு கட்டடம் அமைப்பதற்கு எந்தவொரு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுமாவது உதவி செய்ய முன்வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரியது.எனினும் எமது நிலைய கூட்டங்களில் பல அங்கத்தவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைச்சர் ,மாவட்டசெயலகம், பிரதேசசெயலகம், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும் எமது நிலையத்திற்கு கட்டடம் ஒன்று கட்டாயம் அமைக்கப்படவேண்டும்.கட்டடம் இருந்தால் மட்டுமே சனசமூகநிலையம் பல சேவைகளையும் செய்யமுடியும்.இதனால் நாம் பொதுக்கூட்டம் ஒன்றில்,ஊர்மக்களின் உதவியையும் புலம்பயர்நாடுகளில் வாழும் எமது உறவுகளின் உதவியையும் பெற்று நாமே எமது கட்டடத்தை அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.இது தொடர்பாக வெளியூரில் வசிப்பவர்களுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.ஒரு சிலர் உடனடியாக சில உதவிகளை செய்துள்ளனர்.ஏனையவர்களும் அவர்களை முன் உதாரணமாகக்கொண்டு நிலைய கட்டடம் அமைப்பதற்கு உதவ வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.
மேலும்,பொதுவாக ஒரு கிராமத்தில் நூலகம், பொதுநோக்குமகாமண்டபம், முன்பள்ளி,விளையட்டுமைதானம் மற்றும் கிராமஅலுவலகம் போன்றன கட்டாயம் இருக்க வேண்டும்.எனினும் எமது கிராமத்தில் காணி மற்றும் நிலையான கட்டடம் இன்மையால் இவைகள் சரியான முறையில் இயங்கமுடியதுள்ளது.எனினும் எமது அயற்கிராமங்களில்இவ்வாறான உட்கட்டுமான வசதிகள் சிறப்பாக காணப்படுகின்றன.அதாவது அக் கிராம மக்களின் அயராத உழைப்பினாலுமே இவைகள் சாத்தியமாகின்றன என்று உறுதியாக குறிப்பிடமுடியும்.
"வாசிப்புப்பழக்கம்தான் ஒரு மனிதனை பூரணமாக்குகின்றது"எனவே எமது கிராம மாணவர்களின் அறிவுப்பசிக்கு தீனி போடக்கூடியவாறான நூல்நிலையம் ஒன்று எமக்கு கட்டாயம் தேவைப்படுகின்றது.இன்று அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஓய்வு நேரம் போதாமல் இருக்கின்றது.எனவே அவர்கள் அதிக தூரம் சென்று நூல்நிலையத்தில் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வாசிக்கவோ அல்லது நூல்களை இரவல் பெறுவதோ சிரமமாக உள்ளது.எனவே எமக்கு நவீன வசதிகளுடன் கூடிய நூல்நிலையம் ஒன்று தேவை.
மற்றும் எமது சின்னஞ்சிறார்கள் முதன்முதல் கல்வியைத்தொடரும் முன்பள்ளி ஒன்றும் தேவை.இவ்வாறு பல வகையான தேவைகள் நிறைவேற்றப்பட்டால்தான் எமது கிராம உட்கட்டுமானம் சிறப்பாக அமையும்.
எனவே மேற்குறிப்பிட்டவிடயங்களை உள்ளடக்கிய ஒரு கட்டடத்தை எமது சனசமூகநிலையக்காணியினுள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
எமது நிலைய நிர்வகத்தினரும் ஊர்ப்பொதுமக்களும் "சனசமூகநிலைய கட்டடம் அமைக்கப்படவேண்டும்"என்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இன்று எமது சனசமூகநிலையத்தில் உதயன்,வலம்புரி மற்றும் தினக்குரல் ஆகிய நாளேடுகள் தவறாமல் வாசகர்களுக்காக எடுக்கப்படுகின்றது.மற்றும் குழாய்க்கிண ற்றுக்கம்பி மற்றும் கல்லரியும் அச்சுக்கள் என்பன வாடகைக்கு விடப்பட்டு சிறு வருமானம் சம்பாதிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு தொகுதி புத்தகங்களும் நிலைய தளபாடங்களும் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
எமக்கு கட்டடம் அமைப்பதற்கான நிதி கிடைக்குமேயானால் உடனே இத்திட்டத்தை ஆரம்பித்து நிறைவேற்றுவோம்.யாழ்ப்பாணமாவட்டம் விரைவாக அபிவிருத்தி அடைந்துவரும் இச் சந்தர்ப்பத்தில் எமது கிராமமும் அபிவிருத்தி அடைவது சாலச்சிறந்ததாகும்.இதற்காக நாம் எம்மவர்களின் உதவியை நாடி நிற்கின்றோம்.
_நிர்வாகத்தினர் _